''அதிமுகவுக்கு எதிரான வாக்காளர் மனநிலை ''

தமிழ்நாட்டில் எங்கள் வெற்றியை பாதித்தது!
''அதிமுகவுக்கு எதிரான வாக்காளர் மனநிலை ''
Published on

பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு இரு நாள் கழித்து டெல்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மாவிடம் பாஜக தலைமை அலுவலகத்தில் அந்திமழைக்காகப் பேசினேன்.

இவ்வளவு பெரிய வெற்றி எப்படி சாத்தியமானது?

வலிமையும் உறுதியும் கொண்ட தலைமையை மோடி அளித்ததுதான் முக்கியக்காரணம். இந்தியாவை வலிமையான நாடாகக் காண வாக்காளர்கள் விரும்பினர். பாஜக நாட்டை ஒருங்கிணைக்கும் தேசிய வாதக் கொள்கையை முன்வைத்தது. எதிர்க்கட்சிகளோ மதம் சாதி சார்ந்த பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை முன்வைத்தனர். கடந்த அரசு, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழு கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அளித்தது. 34 கோடி வங்கிக்கணக்குகள் உருவாக்கப்பட்டன. 2.5 கோடி வீடுகள் கட்டப்பட்டன. முத்ரா திட்டத்தின் கீழ் 17.68 கோடி கடன் வழங்கப்பட்டது. 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. சுகாதாரக் காப்பீடு பேருதவியாக இருந்தது. இதெல்லாம் ஏழை மக்கள் பாஜகவை ஆதரிக்கக் காரணமாக அமைந்தது. கீழ்மட்டம் வரை நீண்ட வலிமையான கட்சி அமைப்பும் வெற்றிக்குப் பங்களித்தது.

தென்னிந்திய மாநிலங்களில் பாஜக ஒன்றும்  சாதிக்கவில்லையே?

தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். கேரளாவில் நாங்கள் வெல்லவில்லை. ஆனால் முக்கியமாக 16 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் இது வெற்றியாக மாறும். தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு எதிரான வாக்காளர் மனநிலை எங்களை பாதித்துவிட்டது. ஆந்திராவில் உள்ளூர் கட்சிகள் எங்களைத் தடுத்துவிட்டன.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்சிக்கும் அரசுக்கும் என்ன திட்டம்?

மக்கள் பணி தொடர்ந்து செய்து ஆதரவைப் பெருக்க முயற்சி செய்வோம். அரசின் திட்டமானது வளர்ச்சிப்பணி செய்வது. சுமார் 100 லட்சம் கோடி ரூபாயை நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வரும் ஐந்தாண்டுகளில் அரசு செலவழிக்க உள்ளது. சாலைகளின் நீளம் இருமடங்காக்கப்படும். சிமெண்ட், இரும்பு, மனிதவளம் ஆகியவற்றுக்கு இதனால் தேவை அதிகரித்து பொருளாதாரம் வளரும். 25 லட்சம் கோடி ரூபாய்
விவசாயத்துறையில் முதலீடு செய்யப்படும்.

சிறுபான்மையினருக்கு என்ன செய்வீர்கள்? அவர்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?

அப்படி இல்லை. பாஜகவுக்கு விழுந்த 22 கோடி வாக்குகளில் ஒரு கோடி வாக்குகள் முஸ்லிம்களால் அளிக்கப்பட்டுள்ளன. முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் மகளிரைக் காக்க கொண்டுவரப்பட்ட சட்டம் காரணமாக அவர்கள் எங்களுக்கு வாக்களித்தனர். அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியே எங்கள் நோக்கம். எனவே யாரையும் புறக்கணிக்க மாட்டோம்.

ஜுன், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com